2011ம் நானும்.......
இந்த பதிவை எழுதும் முன் சாலையில் நடந்து வரும் பொழுது என்ன எழுதலாம் என மனதிற்குள் அசை போட்டு வந்தேன். முதல் 5 மாதங்கள் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. மிக சாதாரணமாக, ஒரு சராசரியான வாழ்கை. கல்லூரி நண்பர்களின் பிரிவின் தாக்கம் மெல்ல குறைந்து (கல்லூரி முடிந்து சுமார் ஒரு வருடம் உடன் படித்த நண்பர்களுடன் தொடர்ச்சியான குறுந்தகவல்கள், அழைப்புகள், சந்திப்புகள், தொடர்ச்சியான சென்னை பயணம் என வாழ்கை சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ‘ஆண் என்பதில் பெருமை’ எனும் பதிவில் எழுதியது நிரூபணம் ஆனது. அந்த மாற்றம் புதிய பணி, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த சென்னையில், வெறும் திரைபடங்களிளிலும் வானத்திலும் மட்டுமே பார்த்த எனக்கு வாழ்கையில் முதல் விமானத்தில் பயணம், வெளிநாட்டு பயணம், என்னை உயிருக்கு உயிராக காதலித்த ஏன் தாத்தாவின் மரணம், போன்ற பல நிகழ்வுகள் நிகழ்ந்தவருடம் இது.பல நாள் காத்துக்கிடந்த பணி மாற்றம் நிகழ்ந்தது. பழைய அலுவலகத்தில் வேலை பார்த்த பொழுது ஒவ்வொரு நாளும் ஏங்கி கிடந்த தருணம் வந்தது. கையில் மூன்று பணி-வழங்கு-ஆணை இருந்தது. அனால் இப்பொழுது பார்க்கும் வேலையை தேர்ந்தெடுதேன் (இன்று வரை அதை ஏன் செய்தேன் என்று எனக்கே தெரியாது). அனால் இதற்க்கு முன்பு வேலை பார்த்த பொழுது நான் எங்கிய வாழ்க்கை எனக்கு கிடைக்க இருப்பது என்பது அப்பொழுது தெரியவில்லை. இரவு பனி/பணி, தூக்கமின்மை, சரியான விடுமுறை இன்றி வாழ்க்கை, உடல்நிலை சரியின்மை, மன நிம்மதியின்மை, எதிலும் நாட்டம் இல்லாமை, தனிப்பட்ட வாழ்கையில் கவனம் செலுத்த முடியாமை,புதியதாய் கிடைத்த தனிமை, என்று வாழ்கையின் விரக்திக்கு சென்றேன் என்றே சொல்ல வேண்டும். அனால் அவற்றை கடந்து எனக்கு ஒரு மாற்றத்தை தந்தது புதிய வேலை.(விதியின் சதி, நான் ஆசை படும் எதுவும் உடனடியாக கிடைப்பது இல்லை. அனால் சிறிது நாட்கள் கழித்து அதை விட சிறந்தது ஒன்று எனக்கு கிடைக்கும்.) வாழ்கையில் ஒருவருக்கு கிடைக்கும் மிக பெரும் சாபம் இரவு பணி. அதுவும் நாளேடுகளில் சனி, ஞாயிறுகலிலும் வேலை பார்ப்பது போன்ற சாபகேடு உலகில் எதுவும் இல்லை.
புதிய வேலைக்கு சேர்ந்த சிறு நாளில் உடல் நிலை சீர் ஆனது. வாழ்கையில் மிக பெரிய தண்டனையில் இருந்து விடுபட்ட ஒரு நிம்மதி. வாரம் வார இறுதி நாட்கள் விடுமுறை என்னை போன்ற (ஆ)சாமிகளுக்கு மிக பெரிய வரம். புதிய வேலை, புதிய பொறுப்புகள், புதிய மனிதர்கள் எவ்வாறு இருக்கும் என்று சிறிது அச்சம் இருந்தது. அனால் அனைத்தும் நொடி பொழுதில் மறைந்தது. நான் எதிர்பார்த்ததை விட அனைவரும் நன்றாக இருந்தார்கள்/இருக்கிறார்கள். எனக்கு அவர்களை பிடிக்கும், அவர்களுக்கு என்னை அதை விட அதிகமாக பிடிக்கும். என்னை மிக கண்ணியத்துடன், மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆக மொத்தத்தில், கல்லூரியில் இருந்த வேகம், வீரியம், இப்பொழுது மீண்டும் வந்திருப்பதை உணர்கிறேன் (1 வருடம் அவை எங்கே சென்றன ?)இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருக்கும் மக்களுடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடுமையாக உழைக்கிறேன் என் மனதிற்கு பிடித்தது போல.
இந்த வேலை எனக்கு கொடுத்த மற்றொரு வரப்பிரசாதம், பயணம். முதல் முதலில் வானத்தில் பறந்தேன். அதை பற்றி தனியாக எழுதுகிறேன். என் வாழ்கையின் போக்கை மாற்றுகிறது இந்த பயணங்கள். மற்றொன்று, எப்பொழும் இல்லாமல் இந்த வருடம் இறை சிந்தனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. அது இல்லாமல், ஒரு நாளில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து புதிய மனிதர்களை (சராசரியாக) சந்திக்கிறேன். இது அனைத்திற்கும் இந்த வேலை காரண-காரணியாக அமைந்தது. தினமும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் வந்துள்ளது. நேரம் கிடைக்கும் பொழுதும், எந்த ஊருக்கு சென்றாலும், கோவில்களை மட்டுமே கால்கள் தேடுகின்றன. ஆக மொத்தம் மேலே குறிப்பிட எதையும் என் பழைய வேலையில் இருந்த பொழுது செய்யவில்லை என்பது மட்டும் திண்ணம். பொதுவாக அனைத்திலும் எனக்கு ஒரு கர்வம் உண்டு- எனக்கு கிடைத்ததை போல கல்லூரி வாழ்க்கை, அனுபவம், ஆசிரியர், உயிர் தோழி, உடன் பிறந்த/பிறவா சகோதரிகள், யாருக்கும் கிடைத்திருக்க , வாய்ப்பில்லை. இப்பொழுது வேலை.
இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் என் தாத்தாவின் மரணம் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது. என்னால் அவரை என்றைக்கும் மறக்க முடியவில்லை. என்னை மிகவும் ஏமாற்றிவிட்டு இன்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.அவர் நிச்சியமாக எனக்கு மகனாக பிறப்பார் என நம்புகிறேன். உடலளவில் அந்த உறவு பிரிந்தது என்றல், மேலும் ஒரு சில பழைய உறவுகள் இந்த வருடம் என்னை விட்டு நீங்கின. பொதுவாக உறவில் விரிசல் விடும் பொழுது வருந்தும் நான் இந்த வருடம் சில உறவுகள் பிரிந்ததால் ஒரு நொடி கூட வருந்தவில்லை. எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தேன். என் என்றால், அவர்களை விட்டு நானே விலக காரணம் தேடிக் கொண்டிருந்தேன், அனால் அவைகளே என்னை விட்டு சென்றன என்பது மிக ஆறுதலாக இருந்தது(இவ்வாறு நான் எப்படி நினைத்தேன் அதை எப்படி இங்கு எழுதுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை). பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் தேவை என்று மனம் சொல்லுகிறது அனால் மூளை வேண்டாம் என்கிறது-என்ன செய்ய, நான் மூளை சொல்வதை கேட்பவன் என்பது என் மனதிற்கு தெரியவில்லை. இன்னும் சில நபர்களுடன் பிடிக்காமல் பழகுகிறேன். அவர்களும் விட்டோழிந்தால் நிம்மதியாக இருக்கும். அவர்களே என்னை விட்டு சென்றால் நன்றாக இருக்கும் (வை திஸ் கொலை வெறி ஸ்வாமி?) சிலர் மீது எவளவு அன்பு உள்ளதோ அதே அளவு சிலர் மீது ஆழ்ந்த வெறுப்பு உள்ளது.
![]() |
| My resolution for 2012 |
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தது மகிழ்ச்சி. முதல் முறையாக வாக்களித்தேன். திரைப்படங்களில் வேலாயுதம், மங்காத்தா, கோ, சிறுத்தை, தமிழிலும், துக்குடு, ஓ மை ப்ரெண்ட் தெலுங்கயும் மிகவும் கவர்ந்தன. ஓ மைப்ரெண்ட் மிக மிக அருமை. இந்த வருடம் வாங்கிய மிக முக்கய ஒன்று எனது கைப்பேசி. சாம்சங் கேலக்ஸ்சி 5 வகை சார்ந்த அது என் வேலைக்கு மிக மிக ஒத்துழைக்கிறது. பல முறை கேழே விழுந்தாலும் எந்த தொந்தரவும் இல்லை. அண்ட்ராய்டு இயங்கு தலத்தில் தொடர்வண்டி நேரம் முதல், தினமலர் நாளிதழ் வரை அனைத்தும் என் கைக்குல் ‘அடக்கம்’. என் தேவை அனைத்திற்கும் ஒரு பதிலாக இருக்கிறது இந்த விஞ்ஞானத்தின் கத்துக்குட்டி. (ஒரு வேலை காதலி தேடும் படலத்தில் அவள் சாம்சங் போல இருக்க வேண்டும் என்று வைத்து தேடலாமா?). இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றி மற்றொரு மகிழ்ச்சியான தருணம்.... அதையும் என் வலை பதிவில் குறிப்பிட்டுள்ளேன்....
2012 மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை வேண்டுதலும் இல்லை. பழநி சென்ற பொழுது மனமுருகி முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்தேன். அது இன்னும் நிறைவேறவில்லை. கூடிய விரைவில் நடக்கும் என்று நினைக்கிறன். எனக்கு பிறை வலை தளங்களை படிக்க நேரம் இருப்பதில்லை (ஒரு சில தளங்களை தவிர). அனாலும் இவ்வளவு தூரம் இதை படிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. நான் இங்கு எழுதுவது யாரை எல்லாம் சென்று அடைய வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களை அது சென்று அடைகிறது. பல முறை வார்த்தைகளால் சொல்ல முடியாததை எழுத்துக்கள் சொல்லுகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஸ்வாமிநாதன்/வினோத்










